வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்
80களின் காலக்கட்டத்தில் குருகுல கல்வி பயிற்றுவித்த வடக்கு தெரு அன்ன மடத்திலிருந்த சாமியாரிடம் பிரம்படி பட்டு வாய்ப்பாட்டு மூலம் கணக்குகளை எளிதில் கற்ற நாள் மறக்க இயலாது.
- ஒரு ஊர் வளமையுடனும், புகழுடனும் இருக்க மண்ணை சார்ந்த மனிதர்களும் ஒரு காரணம்.
- பொதுவாக படிப்பு, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் தேடி மண்ணை விட்டு மனிதன் இடம்பெயருவது வாடிக்கை.
- கிராமங்களின் முக்கிய தொழிலாய் கருதப்படுவதும், மக்களின் உயிர் மூச்சாய் இருக்கும் உணவை, உற்பத்தி செய்வதுமான விவசாய தொழில் இன்று போதுமான ஆட்கள் இன்றியும், நீர் பாசன வசதி குன்றியும், நலிவடைந்து வரும் நிலையில், மாற்று காரணி தேடி மண்ணை விட்டு இடம்பெயர்வோர் இன்று அதிகம்.
- அத்தகைய எந்த மாற்றம் வந்தாலும் மண்ணை மக்களையும் பிரியா மண்ணின் மைந்தர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள்.
- இவர்களின் பிறப்பு, வளர்ப்பு மட்டும் இன்றி இறப்பும் பிறந்த மண்ணிலே வேண்டும் என்ற கொள்கைகளோடு வாழ்வார்கள்.
- சொந்த பிள்ளை வீடேயானாலும் நகர்புறத்தில் இவர்களால் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்குவது கடினம்.
- விஞ்ஞான வளர்ச்சியாலும், அறிவியல் முன்னேற்றத்தினாலும் தொழில் துறையில், நகர்ப்புறங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தாலும். கிராமங்களின் நிலை தாழ்ந்து போகாமல் இருக்க முதுகெலும்பாய் இருக்கும் காரணிகள் இவர்கள்.
- இவர்கள்தான் நம் மண்ணின் மைந்தர்கள். அத்தகைய நம் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்களை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரைதான் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்.
********************************************************************************
முதலில் நாம் பார்க்க இருப்பது திரு.கணேசன் அவர்களை
- வடபாலிமங்கலம் ஆலையில் ஏழு ஆண்டுகள் அலுவலர் பணி.
- வீரமாங்குடி கிராம நிர்வாகத்திற்காக கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரூ.1700 சம்பளத்திற்கு இவர் ஆற்றியது பணி அல்ல அர்பணிப்பு என்றே சொல்லலாம்.
- தண்ணீர் குழாயில் தண்ணீர் வரவில்லை, தெரு விளக்கு எரியவில்லை, மின்சாரம் துண்டிப்பு என எத்தனை பிரச்சனைகள் என்றாலும் கிராம பஞ்சாயத்து தலைவரை விட, கணேசனை கூப்பிடுங்கப்பா என உரிமையோடு கிராம மக்கள் அறிந்த ஒருவராய் இருந்தது இவரது உழைப்பிற்கு எடுத்துகாட்டு.
- ஞாயிற்று கிழமைகளில் மாலையில் தமிழ் திரைப்படம் பார்க்க, வெள்ளிகிழமைகளில் இரவில் ஒளியும் ஒலியும் பார்க்க கூட்டம் கூட்டமாய் கூடும் கிராமமக்களின் எதிர்பார்க்கும் முகமாய் மந்தவெளியின் தொலைகாட்சி இயக்குனராய் நன்கு அறியப்பட்டவர்.
- இதுமட்டுமில்லாது வடக்கு தெரு அன்னமடத்தில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் மேடை நாடகத்தில் இவரது பங்களிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. சிவபுராணம், ராமாயணம், மகாபாரதம் என அத்தனை புராணங்களும், இதிகாசங்களும் இவருக்கு அத்துபுடி.
- எண்பது வயதை கடந்தும் இன்றும் சைக்கிளை மிதித்து செல்லும் உடல் நலம் இறைவனின் ஆசிர்வாதம். இன்று இவரது துணைவியாருடன் இயற்கை சூழ்ந்த வயல்வெளியில் அமையபெற்ற தனது இல்லத்தில் வசித்து வருகிறார்.
*******************************************************************************************
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது திரு.கலியபெருமாள் அவர்களை
- மண்ணின் மைந்தர்கள்
- வீரமாங்குடி சின்னத்தெரு திரு.கலியபெருமாள் வாண்டையார் அவர்கள்
- 90ஸ் கிட்ஸ் மிட்டாய்களை வீரமாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.
- தள்ளாத வயதிலும் இறக்கும் தருவாயில் கூட குழந்தைகளின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வீரமாங்குடி மந்தைவெளியில் கிட்டதட்ட 30வருடங்களுக்கு மேல் வணிகம் செய்து வந்த பெருமை இவரையே சேரும்.
- இவர் வெளியில் செல்லும் போது கூட மக்கள் பயனுறும் வகையில் கடையை மந்தைவெளியில் திறந்து வைத்தே சென்று விடுவார்.
- மக்கள் தேவையான பொருட்களை எடுத்து உரிய சில்லறையை வைத்து விட்டு செல்வர் அந்த அளவிற்க்கு வணிகத்தில் நம்பிக்கையும் நாணயத்தையும் விதைத்த மண்ணின் மைந்தர்களின் ஒருவர்.
*******************************************************************************************
அன்னமடம் ஸ்ரீமான்.முருகேச சாமியார் அவர்கள்
அன்னமட நாடகத்தில் நடிப்பதாகட்டும், அமுது படை விழாவில் பாடுவதாகட்டும்.
உணவு வாங்க வீடுவீடாய் வரும் போது தன்னிடம் பயிலும் மாணவர்களின் பயிலும் தரத்தை பெற்றோரிடம் நேரடியாக கருத்து சொல்வதாகட்டும்
இவருடைய பணி தலைசிறந்ததாய் இருந்தது.
80களின் காலக்கட்டத்தில் குருகுல கல்வி கற்ற கடைசி தலைமுறை என்கிற முறையில் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்த வேண்டிய அறங்களில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கிறது.
தும்பை பூ வேட்டி கட்டி,
துறவறம் தன் நெஞ்சில் பூட்டி,
அவர் கற்பித்த கல்வி கொண்டு
கடன்பட்டோம் நாங்கள் அன்று,
நெற்றி நிறை திருநீரு
நெஞ்சைத்தொடும் நரை வேறு,
சட்டையின்றி பார்த்திருந்தோம்,
ஒருநாளும் பட்டையின்றி
பார்த்ததில்லை,
சிம்ம குரலோனே எங்கள்
சிந்தையில் நிறைந்தோனே,
உங்கள் பெயர்கூட அறியோமே,
தமிழமுதே, அறமே,
ஏழெட்டு இலக்கங்களும்,
ஈரெட்டு வாய்பாட்டில்,
அடங்குமென்று உரைத்த அறிவே
அன்று அன்னமடம் வாழ்ந்த, அன்பு சாமியாரே
- கவிதை நடை திரு.சுதாகர்
****************************************************************************
திரு.சாமுபிள்ளை என்கிற இளஞ்செழியன் அவர்கள்
- கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகளில் பலர், சர்க்கரை ஆலைகளைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள்.
- உரியநேரத்தில் அறுவடை செய்யாமல் விடுவது, கொள்முதல் செய்த கரும்புக்குப் பணம் தராமல் இழுத்தடிப்பது போன்ற ஆலைகளின் செயல்பாடுகளால் விவசாயிகள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது.
- ஆனால், ஆலையை நம்பாமல் சாகுபடி செய்யும் கரும்பைச் சர்க்கரையாக மதிப்புக்கூட்டி நல்ல லாபம் எடுக்கும் விவசாயிகளும் உண்டு.
- குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், இலுப்பக்கோரை, மகாலிபுரம், அணைக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளில் பலர் ஆலைகளின் பிடியில் சிக்காமல்... நாட்டுச்சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை உற்பத்திசெய்து நிறைவான வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
- இவர்களில் வீரமாங்குடியைச் சேர்ந்த கரும்பு விவசாயி இளஞ்செழியன், இயற்கை முறையில் கரும்புச் சாகுபடி செய்து... நிறைவான லாபம் ஈட்டி வருகிறார்.
*****************************************************************************
- இது போன்ற நம் மண்ணிற்கு வரமாயும் முதுகெலும்புமாயும் வாய்க்க பெற்றவர்களால் தான் நம் கிராமம் இன்றும் முதன்மை கிராமமாய் இருப்பதில் ஐயமில்லை - மிறன்.ஜி




No comments:
Post a Comment